பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
எழுத்துலகச் ‘சிற்பி’
“கலைச்செல்வி” ஆசிரியர் சிவசரவணபவன்

- தி.ஞானசேகரன்
ஈழத்து இலக்கிய உலகில் ‘கலைச் செல்வி’ சஞ்சிகை கோலோச்சிக் கொண்டிருந்த காலம். 1964ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள், கந்தரோடையில் அமைந்திருந்த ‘கலைச் செல்வி’ காரியாலயத்திற்குச் சென்றிருந்தேன். ஆசிரியர் சிற்பி சரவணபவன் அவர்களின் வீட்டின் மேற்குப்புறமாக அமைந்திருந்த ஒரு சிறு கொட்டகைதான் கலைச்செல்வி காரியாலயம். ஒரு மேசை, கதிரை, முன்னால் இரண்டு வாங்குகள். ஓரமாக ஓர் அலுமாரியில் சில புத்தகங்கள்... மிகவும் எளிமையான சூழல். சிற்பி அவர்களை அன்றுதான் நான் முதன்முதலில் சந்தித்தேன். இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் எவ்வாறு இருப்பார் எனக் கற்பனை செய்து கொண்டு சென்றிருந்த எனக்கு சிற்பி அவர்கள் மிகவும் வித்தியாசமானவராகவே தோன்றினார். எளிமையான தோற்றம், எவ்வித பந்தாவுமின்றிப் பழகும் விதம், வெளிப்படையான பேச்சு, நெஞ்சைத் தொடும் நெருக்கம், வசீகரிக்கும் புன்னகை...
என்னை அறிமுகப்படுத்திவிட்டுத் தயக்கத் துடன் நான் கொண்டு சென்றிருந்த சிறு கதையை அவரிடம் கொடுத்தேன். அதற்கு முன்னர் சில சிறுகதைகளை வேறு பத்திரிகை களுக்கு அனுப்பி அவை பிரசுரமாகாத நிலையில் இக்கதைக்கும் அதேகதிதான் நிகழப்போகிறதோ என்ற தயக்கமும் அப்போது என்னுள் இருந்தது. சிற்பி அவர்கள் அச் சிறுகதையை உடனேயே என்முன்னால் வாசித்தார். “கதை நன்றாக இருக்கிறது... எந்தத் திருத்தமும் செய்ய வேண்டியதில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் கலைச்செல்வியில் இக்கதை பிரசுரமாகும். தொடர்ந்தும் எழுதுங்கள்” என்றார். மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். அவர் கூறியது போலவே அடுத்து வெளிவந்த இதழில் எனது முதற்கதை ‘பிழைப்பு’ வெளியாகியது. நான் எழுத்தாளனானேன்.
“தரம் வாய்ந்த பிரபல்யம்மிக்க ஆக்கங் களால் ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையைச் செழுமைப்படுத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ் நங்கை, சா. வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே. குமாரசாமி, மயிலன், பொ. சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி. ஞானசேகரன், மு. கனகராஜன், பா. சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமா ராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி. க. ரட்னசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்ப தாசன், க. பரராசசிங்கம், மணியம், முகிலன், பொ. சண்முகநாதன் என்பவர்கள் கலைச் செல்வியின் பண்ணையில் வளர்ந்தவர் களே” என்ற சிற்பி அவர்களின் கூற்றினை எண்ணிப் பார்க்கும் போது ஈழத்தில் இத்தகைய பிரபல்யம் வாய்ந்த ஓர் எழுத்தாளர் பட்டாளத்தை வளர்த்தெடுத்த பெருமையை வேறு எந்த இதழாசிரியர்களும் பெறவில்லை என்ற நிதர்சனம் வெளிப்படுகிறது.
1933ல் காரைநகரில் சிவஸ்ரீ க. சிவசுப்பிர மணிய ஐயர், ஸ்ரீமதி சி. சௌந்தராம்பாள் தம்பதியினருக்கு மகனாகப்பிறந்த சிற்பி அவர்களின் இயற் பெயர் சிவசரவணபவன். சொந்த ஊர் கந்தரோடை. இவர் தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பெற்றார். சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தி பெற்றதும் கொழும்பு சுப்றீம் கோட்டில் அரச எழுத்துவினைஞராகப் பணிபுரிந்தார். அக்காலப் பகுதியில் லண்டன் இன்ரர் பரீட்சையில் சித்தி பெற்று ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பின்னர் உயர்கல்வி பெற்று பட்டதாரியாக வேண்டும் என்ற ஆவலில் 1953ல் சென்னை கிறிஸ்த்தவக் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியாக வெளிவந்தார்.
சிற்பி அவர்களின் தந்தையார் பயிற்றப்பட்ட தமிழாசிரியர். தாய்மாமன் வைத்தீஸ்வரக் குருக்கள் தமிழ்ப்பண்டிதர், தமிழாசிரியர், தத்துவ கலாநிதி. வீட்டுச் சூழல் சிற்பியை சிறு வயதிலேயே பழந்தமிழ் நூல்களை வாசிக்க வைத்தது. தந்தையார் வாங்கிவரும் ஈழகேசரி, இந்து சாதனம், கலைமகள் ஆகியவற்றுடன் கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய சஞ்சிகை களையும் ஆர்வமுடன் வாசித்தார். கதைகள், தொடர்கதைகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றை வாசிக்க வாசிக்கத் தாமும் இப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம் இவருள் துளிர்க்கத் தொடங்கியது. வாசிப்பு இவரை எழுத்தாளனாக்கியது. அகிலன் எழுதிய கதைகள் சற்று அதிகமாக இவரைக் கவர்ந்தன. டாக்டர் மு.வ. அவர்களின் நூல்களும் இவரது இலக்கியப் பாதையின் வழிகாட்டிகளாக அமைந்தன.
மாணவப் பருவத்தில் ஈழகேசரி பாலர் பகுதியில் இவரது கவிதை ஒன்று பிரசுரமாகியது. சுதந்திரன் பத்திரிகையிலும் ‘ஸ்கந்தா’ என்ற கல்லூரிச் சஞ்சிகையிலும் கட்டுரைகள் வெளி யாகின.
1952ல் கொழும்பில் இவர் தொழில் புரிந்து கொண்டிருந்த வேளையில் இவரது முதற் சிறுகதையான ‘மலர்ந்த காதல்’ எஸ் டி. சிவநாயகம் அவர்களால் சுதந்திரனில் வெளியிடப்பட்டது.
1953ல் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரில் கல்விகற்கும் வேளையில் ‘இளந் தமிழன்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். அதுவரை காலமும் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்த இளந்தமிழன், சிற்பி பொறுப்பேற்றபின் அச்சுவாகனமேறி வெளிவந்தது. புகழ்மிக்க சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியின் விடுதியொன்றிலிருந்து அச்சுவாகனம் ஏறிய முதலாவது தமிழ்ச்சஞ்சிகை என்ற புகழை இளந்தமிழன் பெற்றுக் கொண்டது. அக்கால கட்டத்தில் எஸ். பொ., கவிஞர் கந்தவனம் ஆகியோரும் கிறிஸ்த்துவக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர்.
1955ல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ‘மறுமணம்’ என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
1956ஆம் ஆண்டில் ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளியாகியது. ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களின் ஆக்கத் திறனை முதன் முதலில் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டிய தொகுதி இதுதான். சிற்பி அவர்களே ‘ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற மகுடத்தில் இந்நூலை வெளிக்கொணர்ந்தார்.
ஆரம்பகாலத்திலிருந்தே சஞ்சிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் சிற்பிக்கு இருந்தது. சென்னையில் ‘இளந்தமிழன்’ இதழை வெளியிட்டது, அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது, சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றது, ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியை வெளியிட்டது. உதயம் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது யாவும் உற்சாகத்தை ஊட்ட, சஞ்சிகை ஒன்றை ஆரம்பிப்பதுபற்றி எழுத்தாள நண்பர்கள் சிலருடன் கலந்துரையாடினார். முதுபெரும் எழுத்தாளர்கள் க. தி. சம்பந்தன், ச. ப. சர்மா, இரசிகமணி கனக. செந்திநாதன், ச. இராசநாயகன், தேவன், சி. பொன்னம்பலம் (ஆதவன்) ஆகியோரை அழைத்துப் பரமேஸ்வரக் கல்லூரியிலே ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். யாழ்ப்பாணத்திலிருந்து இலக்கியச் சஞ்சிகை ஒன்றை ஒழுங்காக வெளியிடுவதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை எடுத்து விளக்கிய அவர்கள், ‘ஈழத்துச் சிறுகதைகள்’ தொகுதியைத் தொடர்ந்து வெளியிடுவது பொருத்தமானது என்றும், அவை வெற்றியளித்தால் வேறும் பல நல்ல நூல்களை வெளியிடலாம் என்றும் ஆலோசனை கூறினர். சஞ்சிகை வெளியிடும் நோக்கத்தைத் தற்காலிகமாகப் பிற்போட்டிருந்த வேளையிலே, களுத்துறைத் தமிழ்க்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (நா. பால சுப்பிரமணியம்) உதயணன் (இ. சிவலிங்கம்) ஆகியோர் கந்தரோடைக்குச் சென்று சிற்பியைச் சந்தித்தார்கள். களுத்துறைத் தமிழ்க் கழக வெளியீடான ‘ஈழதேவி’யை 1958ஆம் ஆண்டு ஆடியில் நடை பெற்ற இனக்கலவரம் காரணமாக தொடர்ந்தும் களுத்துறை யிலிருந்து வெளியிட முடியாததால், அச் சஞ்சிகையின் சகல பொறுப்புக்களையுமேற்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடுமாறு சிற்பி அவர்களைக் கோரினர். சிற்பியிடம் ஏற்கனவே இருந்த இத்தகைய ஆர்வத் தீயினுக்கு அவர்களுடைய கோரிக்கை நெய்யூற்றியது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் “ஈழதேவி” என்ற பெயரைக் “கலைச் செல்வி” என மாற்றி யாழ். தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் மாதந்தோறும் அதை வெளியிடுவதென முடிவுசெய்யப்பட்டது. 1958ஆம் ஆண்டு ஆடிமாதம் சிற்பி கலைச்செல்வியை வெளிக் கொணர்ந்தார்.
‘கலைச்செல்வி’ வெளிவரத் தொடங்கிய காலம் மரபு, பண்டிதப் போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண்வாசனை முதலியவற்றைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கப் பட்ட காலம். இவை சம்பந்தமான தம் சிந்தனை யின் அடிப்படையில் எழுத்தாளர்களும் பலர் இரு வேறு அணிகளாகப் பிரிந்திருந்தனர். அணி சாரா எழுத்தாளர்களும் இருந்தனர். தமிழ் இலக்கிய மரபு என ஒன்று இருப்பதை ஏற்றுக் கொண்டு, தேவையான சந்தர்ப் பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது கலைச்செல்வியின் நிலைப் பாடாக இருந்தது.
“முற்போக்கு இலக்கியம் உச்சக்கட்டத்தில் இருந்த அறுபதுகளை ஒட்டிய காலப்பகுதியில் எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுங்கும் இடமாகக் கலைச்செல்வி விளங்கியதாக”ப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.
ஞானம் சஞ்சிகைக்காகச் சிற்பி அவர்களை நான் நேர்காணல் செய்தபோது பேராசிரியர் கைலாசபதியின் கூற்றுப் பற்றிய உங்களது கருத்து என்ன என வினவினேன். அதற்கு சிற்பி அவர்கள் புன்னகைத்துவிட்டு, “வாசகர் களுடைய சிந்தனைகளைத் தூண்டிச் செழுமைப்படுத்தும் விதத்தில் அவர்களுடைய இதயத்தைத் தொட்டு, நல்லுணர்ச்சிகள் கிளர்ந் தெழும் வகையில் கலைநயத்துடன் எழுதப்படும் கதைகள், கவிதைகள் இலக்கிய தரம் வாய்ந்தவை என்பது என் கருத்து. கலைச்செல்வியில் வெளியிடுவதற்குரிய ஆக்கங்களை இதன் அடிப்படையிலேயே தெரிவு செய்தேன். எழுத் தாளர்களின் பின்னணிகளை - அரசியற் சார்பு, இலக்கிய அணி, வாழ்விடம், கல்வித்தராதரம் சாதிசமயப் பிரிவுகள் போன்றவற்றை நான் சிறிதும் கவனத்துக்கு எடுக்கவில்லை. வெளி வந்த கதை கவிதைகளுள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களும் அடங்கும். பேராசிரியர் கைலாசபதிகூட கலைச்செல்வியில் எழுதி யிருக்கிறார். ‘எழுத்துலகில் நான்’ ‘என்னை உருவாக்கியவர்கள்’, போன்ற புதுமைத் தொடர்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றன. இருந்தும் கைலாசபதி இப்படியான ஒரு கருத்தை ஏன் வெளியிட்டார் என்பது எனக்கு விளங்க வில்லை, அதைப்பற்றி நான் ஆராய விரும்ப வில்லை” எனக் கூறினார்.
ஈழத்து இலக்கியத்திற்கு சிறுகதை, நாவல், இதழியல் ஆகிய துறைகளில் சிற்பி கணிசமான பங்கினை வழங்கியுள்ளார். இவரது சிறுகதைத் தொகுதிகளாக ‘நிலவும் நினைவும்’, ‘சத்திய தரிசனம்’ ஆகியவை வெளிவந்துள்ளன. ‘உனக் காகக் கண்ணே’, ‘சிந்தனைக் கண்ணீர்’ ‘அன்பின் குரல்’ ஆகிய சிற்பியின் நாவல்களில் உனக்காகக் கண்ணே மட்டும் நூலுருப் பெற்றுள்ளது.
“கலைச்செவ்வி சஞ்சிகை மூலம் ஈழத்து இதழியலுக்கு சிற்பி ஆற்றிய பணி அளப்பரியது. 1958ஆம் ஆண்டு ஆடி மாதம் கலைச் செல்வி இலக்கியச் சஞ்சிகை வெளிவந்த போது, ஈழத்து இலக்கியப் போக்கின் மறுபுறத்திற்கான தளம் திறக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார் ஈழத்தின் பிரபல எழுத்தாளரான செங்கை ஆழியான்.
கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966ஆம் ஆண்டு ஆவணியில் வெளியானது. செல்வி ப. வித்தியா என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி தனது இறுதி ஆண்டு சிறப்புக் கலைமாணி தேர்வினைப் பூர்த்திசெய்ய 1988ஆம் ஆண்டில் “ஈழத்துச் சிறுசஞ்சிகை வரிசையில் கலைச் செல்வியின் பங்களிப்பு” என்ற தலைப்பில் நீண்டதோர் ஆய்வுக்கட்டுரையைத் தமிழ்த் துறைக்குச் சமர்பித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
“சிற்பி - சரபணவன் - ஓர் ஆய்வு” என்ற ஆய்வுக் கட்டுரை, செல்வி சுதர்ஷினி சச்சி தானந்தன் அவர்களால், 1996ஆம் ஆண்டு சிறப்புக் கலைமாணி இறுதியாண்டுத் தேர்வி னைப் பூர்த்தி செய்யுமுகமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்துறைக்குச் சமர்ப்பிக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
‘மறுமலர்ச்சி சஞ்சிகை மூன்று ஆண்டு களுக்குள் செய்த இலக்கியப்பணியை ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் கலைச்செல்வி தொடர்ந்து விரிவாக்கியது’ என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
‘விளக்கு’ என்ற கல்வி இதழ் ஒன்றின் ஆசிரியராகவும் சிற்பி விளங்கியுள்ளார். இவ் விதழ் கல்வியாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட இதழாகும்.
அமரர் மு. பஞ்சலிங்கம் யாழ் - அரச அதிபராக இருந்த வேளையில் உருவாக்கப்பட்ட யாழ். கலாசாரப் பேரவையில், தமிழ் இலக்கியக் குழுத் தலைவராகச் சிற்பி பணியாற்றினார். அப்போது பழம்பெரும் எழுத்தாளர் திரு. அ. செ. முருகானந்தன் அவர்களின் “மனிதமாடு” சிறுகதைத் தொகுதி பேரவையின் வெளியீடாக மலர்ந்தது.
சிற்பி அவர்கள் உத்தியோக மொழித் திணைக்களத்துக்காக மு.ஹ. நீலகண்ட சாத்திரி எழுதிய ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலினை திரு. வ. பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து தமிழில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு பாடப்புத்தகங்களை இலவசமாக வெளியிடத் தீர்மானித்து, ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித்தனிக் குழுக்களை நியமித்தபோது, தமிழ்மொழி - இலக்கணம் இலக்கியக் குழுவில் சிற்பி அவர்களும் இடம் பெற்றிருந்தார். தமிழ் மலர் - 1, தமிழ் மலர் - 7 ஆகிய இரண்டு நூல்கள் முதலில் வெளி வந்தன.
சிற்பி அவர்கள் தமிழக தீபம் சஞ்சிகையில் ‘யாழ்வாசி’ என்ற பெயரில் மாதம் தோறும் எழுதிய ‘இலங்கைக்கடிதம்’ என்ற பகுதி பலராலும் பாராட்டப்பட்டது. இலங்கை எழுத்தாளர் பற்றியும் இங்கு நடைபெறும் கலை இலக்கிய சமய கலாசார நிகழ்ச்சிகளைப் பற்றியும் தமிழ் நாட்டவர் அறிந்து கொள்வதற்கு இக் கடிதத்தொடர் பெருமளவில் உதவியது.
கல்லூரி அதிபராக இருந்து ஓய்வுபெற்ற சிற்பி அவர்கள் தற்போது லண்டனில் இருந்து வெளியாகும் ‘சுடரொளி’ சஞ்சிகையின் கௌரவ ஆசிரியராக இருக்கின்றார்.
சிற்பி அவர்களின் இலக்கியப் பணியினைப் பாராட்டி, வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சு 2002ஆம் ஆண்டில் ஆளுநர் விருது அளித்துக் கௌர வித்தது.
ஞானம் சஞ்சிகையை ஆரம்பித்தபோதும், தொடர்ந்து வந்த காலப்பகுதியிலும் யாழ் செல்லும் போதெல்லாம் நான் அவர்களைச் சந்தித்து ஞானம் சஞ்சிகை தொடர்பான ஆலோசனைகள் பெறுவது வழக்கம். எழுத்துலகத்துக்கு என்னையும் என்போன்ற பலரையும் செதுக்கியெடுத்த இலக்கியச் சிற்பி அவர். அவரைப்பற்றி அட்டைப்பட அதிதியாக ஞானம் இதழில் எழுதுவதில் நான் பெருமித மடைகிறேன்.
கலைச்செல்வி தனைப்போற்றி கற்போடு இலக்கியத்தில்
விலைபோகாப் பண்போடு வீறுபெற வாழ்ந்த மகன்
பலபேரைத் தான் செதுக்கி பலம் சேர்த்த கலைச் சிற்பி
அலையாது புகழ் சேர்த்தோன் அருமறையோர் வழிவந்தோன்
என ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழியாத்தடம் பதித்த சிற்பி அவர்களை கொழும்புக் கம்பன் கழகம் புகழ்ந்தேத்தி இவ்வாண்டு கொண்டாடிய வெள்ளிவிழாவில் சான்றோர் விருந்தளித்துக் கௌரவித்துப் பெருமைகொண்டது சாலவும் பொருத்தமானதே.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.