ஞானம் சஞ்சிகை தனது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல சிரமங்களின் மத்தியிலேயே நாம் மாதம் தவறாது ஞானத்தை வெளியிட்டு வருகிறோம். ஒரு சிற்றிதழைக் கொண்டு நடத்துவதற்கு ஏற்ற சுமுகமான சூழல் இன்றில்லை. நாட்டில் நிலவும் போர்ச்சூழல் மக்கள் மனதில் பீதியையும் கிலேசத்தையும் ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. சுதந்திரமாக இயங்கமுடியாத நிலை, கருத்துக்களைப் பயமின்றி வெளியிடமுடியாத சங்கடம், வாழ்க்கைப் பிரச்சனைகள் இவையாவும் படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. வாசகர்களிடையே ஆர்வம் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையினரிடம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இவற்றைவிட சஞ்சிகை விநியோகம், விளம்பரங்களைப் பெறுதல், சந்தாதாரர்களிட மிருந்து உரிய நேரத்தில் சந்தாவைப் பெறுதல், பிறமாநிலங்களில் வாழும் வாசகர்களை, படைப்பாளிகளை, விற்பனை முகவர்களை சென்று சந்தித்தல் போன்ற செயற்பாடுகளிலும் இன்றைய நாட்டுச்சூழல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அச்சுச் செலவு, ஏனைய நிர்வாகச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
ஆனாலும் இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது. முன்னைய ஈழத்துச் சஞ்சிகைகள் செய்த இலக்கியப் பணியின் தொடர் சங்கிலியை நாம் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயற்படுவது காலத்தின் தேவையாகிறது.
கலை இலக்கியம் வாழ்வியலின் ஓர் அங்கம். காலத்தின் தேவையை மனத்திலிருத்தி ஓர் இலக்கியச் சஞ்சிகைக்குரிய தார்மிகக் கடமையை நன்குணர்ந்து ஈழத்து இலக்கியம் பற்றிய பிரக்ஞையுடன், இலக்கியதரம் பற்றிய சிரத்தையுடன் நமது பணியைத் தொடர்கிறோம்.
எம்முன் விரிந்திருக்கும் பணிகள் பல, அவற்றை நிறைவேற்றுவோமென்ற திடசங் கற்பமும் செயற்திட்டங்களும் அவற்றால் நாம் பெற்ற பெறுபேறுகளும் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிவந்த ஞானம் இதழ்களில் பதிவாகியுள்ளன.
தற்போது ஞானம் ஈழம் என்ற எல்லையைத் தாண்டி தமிழ்மக்கள் பரந்துவாழும் இடங்களுக்கெல்லாம் சென்று சர்வதேசப் பரிமாணத்தை நோக்கி விரிந்து கொண்டிருக்கிறது. உலகின் பலபாகங்களிலும் வாழும் படைப்பாளிகள் ஞானத்தில் எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் சஞ்சிகையாக அவர்களது தாயகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகையாக ஞானத்தை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடன் செயற்பட்டு வருகிறோம்.
வெளிநாடுகளில் வாழும் இலக்கிய ஆர்வலர்களின் நன்மை கருதி ஞானத்தை இணையத் தளத்தில் மாதத் தொடக்கத்திலேயே பார்க்கக்கூடிய வசதிகளைச் செய்துள்ளோம். அத்தோடு முன்னர் வெளிவந்த இதழ்களையும் இந்த இணையத் தளத்தில் பார்க்கமுடியும். (இணைய முகவரி www. gnanam. info)
நிறைவுபெற்ற ஆறுவருட காலத்தில் நாம் மேற்கொண்ட பணிகள் எமக்கு மனநிறைவைத் தருகின்றன. தஞ்சைப் பல்கலைக் கழக மாணவி மா. ஷீலா ஞானம் 1-24 இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து M.Litt பட்டம் பெற்றுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த திரு. ஐ. குகநேசன் இலங்கை நூலக சங்கத்தின் நூலகத் தகவல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறிக்காக ஞானம் முதல் ஈராண்டு வெளிவந்த இதழ்களைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்ட சுட்டிக்காகத் திறமைச்சித்தி பெற்றுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ் விசேடத்துறை மாணவன் எச். எம். எம். மன்சூர் முதல் நான்கு ஆண்டுகால இதழ்களை “ஞானம் இலக்கிய சஞ்சிகை ஒரு நோக்கு” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த தி. அனுஷியா, நூலக விஞ்ஞான டிப்ளோமா பரீட்சைக்கான சுட்டியாக்கத்திற்கு ஞானம் நான்காம் ஐந்தாம் வருட இதழ்களைத் தெரிவு செய்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவி தயாழினி கணபதிப்பிள்ளை தற்போது 2004, 2005ஆம் வருட ஞானம் இதழ்களைத் தனது தமிழ்ப்பாட விசேட கற்கை நெறிக்காக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். இவையெல்லாம் ஞானத்தின் இலக்கிய தரத்தின் சாட்சியங்கள்; அறிவுக அங்கீகாரங்கள்.
ஏழாவது ஆண்டில் நாம் காலடி எடுத்துவைக்கும் இவ்வேளையில் பல புதிய அம்சங் களை வாசகர்களுக்குத் தரவுள்ளோம். முன்னாள் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியனின் “தமிழிலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசைவழிகளைத் தேடி” என்ற கட்டுரைத் தொடர் இவ்விதழில் ஆரம்பமாகிறது. இலங்கை வானொலியில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பணிபுரிந்த எஸ். நடராஜன் “திரை மறைவுக் கலைஞர்கள் - ஓர் அனுபவத் தொகுப்பு” என்ற தொடரை இவ்விதழில் ஆரம்பிக்கிறார். காலப்போக்கில் மேலும் பல புதிய அம்சங்களை வாசகருக்குத் தரவுள்ளோம்.
ஈழத்துக்கலை இலக்கியத் தரமும் தகைமையும் பேணப்படவேண்டும்; பேசப்பட வேண்டும். வாசகர்களின் ரசனை மட்டத்தை வளப்படுத்தி ஆரோக்கிய இலக்கிய சிந்தனையை வளர்த்துவரும் எமது பணியை பக்கச்சார்பற்ற நடுநிலைமைச் செயற்பாடு களை மதித்து இலக்கிய உலகம் எமக்கு அளித்துவரும் ஒத்துழைப்பும் ஊக்கமும் உற்சாகம் ஊட்டுவனவாக அமைகின்றன; தொடர்வோம் எமது பணியை.