அணிந்துரை
பேராசிரியர்
க. அருணாசலம்
(தமிழ்த்துறை, பேராதனைப்
பல்கலைக்கழகம்)
1
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும்
மேற்பட்ட காலத்
தமிழ் இலக்கிய
வரலாற்றைக் கூர்ந்து
கவனிக்கும் போது
பல உண்மைகள் புலப்படும்.
அவற்றுள் ஒரு சிலவற்றை
இங்கு நோக்கலாம்.
காலத்தால் மிக
முற்பட்ட சங்க
இலக்கியங்கள்
வெறுமனே இலக்கியங்களாக
மட்டுமன்றி அக்கால
மக்களின் வாழ்வியல்
அம்சங்களைத் தெளிவாகப்
புலப்படுத்தி
நிற்கும் மிகச்சிறந்த
வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும்
விளங்குகின்றன
என்னும் உண்மையைப்
பலரும் ஏற்றுக்கொண்டனர்.
ஒருசிலர் அவற்றை
ஏற்கத் தயங்கினர்.
ஆயின் கடந்த சில
ஆண்டுகளுக்கு
முன்பு,
பல்லாண்டு காலத்
தேடுதல் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள்
முதலியவற்றின்
மூலமாக ஐராவதம்
மகாதேவன் அவர்கள்
எழுதி வெளியிட்டுள்ள
“முந்து
தமிழ்க்கல்வெட்டுக்கள்” என்னும்
நூல் சங்ககால இலக்கியங்களை
அலட்சியம் செய்தவர்களை
வாய்மூடச் செய்துள்ளது.
சுமார்
முந்நூறு ஆண்டுகளுக்கும்
மேற்பட்ட காலப்பகுதியைக்
கொண்டுள்ள சங்ககாலத்தில்
இலக்கியங்களைப்
படைத்தளித்த இலக்கிய
கர்த்தாக்களைக்
கூர்ந்து கவனித்தால்
சில உண்மைகள் புலப்படும்.
வறுமையில் வாடிய
புலமையாளர்களும்
அறிவுடை மன்னர்களும்
புலமை மிக்க பெண்களும்
கணக்காயர்களும்
வணிகர்களும் எனப்
பல திறத்தினரும்
இலக்கிய கர்த்தாக்களாக
விளங்கியுள்ளனர்
என்பதை நாம் அறிய
முடிகின்றது. இதே
நிலைமையை நாம்
தொடர்ந்து இற்றைவரை
காணலாம். சோதிட
வல்லுனர்களும்
வைத்தியர்களும்
இலக்கியங்களைப்
படைத்தளித் தமையை
ஈழத்தின் இடைக்காலத்
தமிழ் இலக்கிய
உலகிற் காணலாம்.
ஈழத்திலே
இருபதாம் நூற்றாண்டிலும்
இன்றும் கூட வைத்தியத்
துறையைச் சார்ந்த
நந்தி, ஜின்னா
ஷரிபுத்தீன், தி. ஞானசேகரன், எம். கே. முருகானந்தன், க. சதாசிவம், எஸ். முருகானந்தன்
போன்றோர் வைத்தியத்
துறையில் மட்டுமல்லாது
நவீன இலக்கியத்
துறையிலும் தமது
தடங்களைப் பதித்துள்ளமை
மனங்கொளத்தக்கது.
2
நீண்டகாலம்
வைத்தியராகக்
கடமை புரிந்து
வரும் ஞானசேகரன்
அவர்கள் யாழ்ப்பாணம்
புன்னாலைக்கட்டுவன்
என்னும் கிராமத்தைப்
பிறப்பிடமாகக்
கொண்டவர்; அந்தணர்
குலத்தைச் சேர்ந்தவர்; ஆரம்பக்
கல்வியினையும்
இடைநிலைக் கல்வியினையும்
யாழ்ப்பாணத்தில்
மேற்கொண்டார்.
பின்னர் கொழும்பிலே
தமது மருத்துவக்
கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து
மலையகத்திலே நீண்ட
காலமாக வைத்தியராகக்
கடமையாற்றி வருகின்றார்.
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும்
அவர் பெற்றுக்கொண்ட
நிறைந்த அநுபவங்களே
அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும்
மலர்ந்துள்ளதை
அவதானிக்கலாம்.
ஞானசேகரன்
தமது “வாசனை” என்னும்
சிறுகதையின் ஓரிடத்தில்
பின்வருமாறு கூறியுள்ளமை
மனங்கொள்ளத்தக்கது.
“ ............. தாத்தா
என்மீது அளவு கடந்த
அன்பைச் சொரிபவர்.
பால்யப் பருவத்திலிருந்து
இளமைப் பருவம்
வரை அவரது அரவணைப்பிலும், நிழலிலும்தான்
வளர்ந்தேன். ஒவ்வொரு
பருவப் படிமுறை
வளர்ச்சியிலும்
அந்தந்தப் பருவத்திற்கேற்ப
அவர் என்னை உருவாக்குவதில்
கவனம் செலுத்தியிருக்கிறார்.
பாலர் வகுப்பில்
படிக்கும் காலத்தில்
தாத்தா தனது தோளில்
என்னைச் சுமந்து
பள்ளிக்கூடம்
அழைத்துச் சென்றது
இன்னும் என் நெஞ்சிலே
நிழலாடிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு என்னைத்
தோளிலே சுமந்தபோது
அவரது உடம்பின்
வாசனை படிப்படியாக
என் ஜீவனுக்குள்
புகுந்து ஒன்றிப்
போய்விட்டது. அந்த
வாசனை என்னுள்
ஏற்படுத்திய பாதிப்பு
சாதாரணமானதல்ல.
அந்த வாசனையின்
சிறு அதிர்வு கூட
என்னைப் பரவசத்தில்
ஆழ்த்திவிடும்.
.......தாத்தாவின் கனிவான
பேச்சிலும் அவர்
சொரியும் அன்பிலும்
மயங்கிப் பல மணிநேரங்கள் அவரது மடியில்
அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன்.
அவர் கூறிய கதைகள்தான்
பிற்காலத்தில்
நான் ஓர் எழுத்தாளனாக
உருவாகுவதற்கு
உரமாக அமைந்தது.
இதனைப் பல முறை
நான் எண்ணியதுண்டு.”
1960களிலிருந்து
இற்றைய வரை எழுதி
வரும் ஞானசேகரனது
படைப்புகளில்
மானுடத்தை இதய
சுத்தியோடு நேசிக்கும்
உயர் பண்பையும்
சிறுமைகண்டு பொங்கியெழும்
இயல்பையும் சமுதாயத்தில்
நிலவிவரும் ஊழல்களையும்
போலித்தனங்களையும்
கண்டிக்கும் பாங்கினையும்
மாறிவரும் கருத்தோட்டங்களை
உள்வாங்கிப் புதியதொரு
சமுதாயத்தினை
உருவாக்கவேண்டும்
என்னும் பேராவலையும்
ஒருங்கே தரிசிக்க
முடிகின்றது. அவர்
அந்தணர் குலத்தைச்
சேர்ந்தவராயினும்
சாதி, மத
பேதமற்ற சமுதாயத்தைக்
காணவிழையும் முனைப்பினை
அவரது சிறுகதைகள்
பலவும் நாவல்கள்
சிலவும் வெளிப்படுத்தி
நிற்பதை அவதானிக்கலாம்.
1977ஆம் ஆண்டு
வெளிவந்த அவரது
‘புதிய
சுவடுகள்’ என்னும்
நாவல் இவ்வகையில்
விதந்தோதத்தக்கது. அவரது
‘குருதிமலை’ என்னும்
நாவலும் ‘அல்சேஷனும்
ஒரு பூனைக்குட்டியும்’ என்னும்
சிறுகதைத் தொகுதியும்
பல்கலைக்கழகப்
பாடநூல்களாக அங்கீகாரம்
பெற்றுள்ளன. தமது
படைப்பாற்றலால்
பரிசில்கள் பலவற்றைப்
பெற்றுக் கொண்ட
அவர், வயதான
நிலையிலும் கூட
இன்றும் இளமைத்
துடிப்புடன் செயற்பட்டுக்
கொண்டிருத்தல்
பாராட்டத்தக்க
ஒன்றாகும். அவரது
சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும்
ஈழத்துப் புனைகதை
உலகில் முக்கிய
இடத்தைப் பெறுகின்றன.
தமது
புனைக்கதைகள்
மூலம் நீண்ட காலமாகவே
ஈழத்து இலக்கிய
உலகிலும் தமிழகத்து
இலக்கிய உலகிலும்
நன்கு அறிமுகமாகியுள்ளார்.
புனைகதைகளைப்
படைப்பதுடன் மட்டும்
அமையாது கடந்த
சில ஆண்டுகளாக
‘ஞானம்’ என்னும்
தரமானதோர் இலக்கியச்
சஞ்சிகையை மாதாமாதம்
வெளியிட்டு வருகிறார்.
இதுவரை அறுபதுக்கும்
மேற்பட்ட இதழ்கள்
வெளிவந்துள்ளன.
படிப்படியாக இச்
சஞ்சிகையின் தரம்
உயர்ந்து செல்வதனையும்
பயன்மிக்க நேர்காணல்களும்
விவாதங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும்
இடம்பெற்று வருவதனையும்
அவதானிக்கலாம்.
‘ஞானம்’ சஞ்சிகையின்
தரத்தின் காரணமாகக்
குறுகிய காலத்துள்
இலங்கை,
இந்தியா என்ற
மட்டுப்படுத்தப்பட்ட
எல்லைகளைக் கடந்து, உலகில்
தமிழ் பேசும் மக்கள்
வாழும் நாடுகள்
எல்லாவற்றிலும்
இது வலம்வந்து
கொண்டிருப்பதை
அவதானிக்கலாம்.
இச்சஞ்சிகைமூலம்
ஞானசேகரனின் சாதனைகளும்
புகழும் உலகெங்கும்
பரவிவருகின்றன.
எழுத்தாளர் ஞானசேகரனிலும்
பார்க்க ‘ஞானம்’ சஞ்சிகையின்
ஆசிரியரது பெயரே
இன்று இலக்கிய
உலகில் அதிகம்
பிரபலமடைந்து
வருவதைக் காணமுடிகின்றது.
தமிழ்
இலக்கிய உலகம்
ஆரம்பத்தில் ஞாசேகரனைத்
தரமானதொரு படைப்பாளியாகவே
இனங்கண்டிருந்தது.
ஆயின் ‘ஞானம்’ சஞ்சிகை
வெளிவரத் தொடங்கியதிலிருந்து
இதழ்கள்தோறும்
அவர் முன்வைக்கும்
கருத்துகள், நேர்காணலின்போது
ஆய்வாளர் களையும்
படைப்பாளிகளையும்
அறிமுகப்படுத்தும்
பாங்கு,
தொடுக்கும் வினாக்கள், மணிவிழா
நாயகர்களையும், மறைந்த
எழுத்தாளர்களையும்
அறிமுகம் செய்யும்போதும்
நினைவு கூரும்போதும்
வெளிப்படுத்தும்
கருத்துகள், வாசகர்களின்
கேள்விக்கான பதில்கள்
முதலியவற்றின்
மூலம் அவரது எழுத்தாற்றலை
மட்டுமன்றி விசாலித்த
அறிவையும் இலக்கியப்
புலமையையும் எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும்
இனங்காணும் ஆற்றலையும்
கண்டு இலக்கிய
உலகம் மூக்கின்மேல்
விரலை வைத்துக்
கொண்டிருக்கிறது.
3
இச்
சிறுகதைத் தொகுதியிலமைந்துள்ள
கதைகள் யாவற் றையும்
ஒட்டுமொத்தமாக
நோக்கும் போது
ஒரு சில உண்மைகள்
புலப்படும். இலக்கியம்
என்பது காலத்தின்
கண்ணாடி எனவும்
அவ்வக்கால மக்களின்
வாழ்வியலைச் சித்தரிக்கும்
வரலாற்று ஆவணங்கள்
எனவும் சமுதாயத்தை
விமர்சனம் செய்யும்
சாதனம் எனவும்
சமுதாயத்தை அது
இருக்கின்ற நிலையிலும்
பார்க்க உயர்ந்த
நிலைக்கு எடுத்துச்
செல்ல முனையும்
வலிமை வாய்ந்த
ஆயுதம் எனவும்
பலபடக் கூறுவர்.
மேற்கண்ட கருத்துகள்
யாவும் ஞானசேகரனின்
சிறுகதைகளுக்கும்
பொருந்தக் கூடியனவே.
இன்றைய
யாழ்ப்பாணத்து
இளந்தலைமுறையினர்
பலரும் அறிந்திராத
செய்திகள் பலவற்றைப்
பல சிறுகதைகள்
வெளிப்படுத்தி
நிற்கின்றன. சமகாலப்
போர்ச் சூழலைச்
சில சிறுகதைகள்
அற்புதமாகப் படம்
பிடித்துக் காட்டுகின்றன. சமுதாயச்
சிக்கல்களைப்
பல சிறுகதைகள்
விமர்சனம் செய்கின்றன.
மலையகத்தையும்
கொழும்பு மாநகரையும்
மையப்படுத்திப்
பல சிறுகதைகள்
வெளிவந்துள்ளன.
இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும்
தொடர்புபடுத்தும்
அகலுலகத் தொடர்புகொண்ட
சிறுகதையொன்றும்
இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக வைத்தியராகக்
கடமையாற்றிப்
பெற்றுக்கொண்ட
அநுபவங்களும்
சிறுகதைகளாக மலர்ந்துள்ளன.
இச்சிறுகதைகளை
ஐம்பது அல்லது
நூறு வருடங்களுக்குப்
பிறகு வரும் வாசகர்கள்
படிக்கும்போது
இவற்றின் வரலாற்று
முக்கியத்துவத்தை
அறிந்து கொள்ளத்
தவறமாட்டார்கள்
என்பதில் ஐயமில்லை.
இத்
தொகுதியிலமைந்துள்ள
சிறுகதைகளைத்
தெளிவு கருதிப்
பின்வருமாறு பகுத்து
நோக்கலாம் :
(அ) யாழ்ப்பாணப்
பிரதேசத்தை மையமாகக்
கொண்ட சிறுகதைகள்.
(ஆ) மலையகப்
பிரதேசத்தை மையமாகக்
கொண்ட சிறுகதைகள்.
(இ) கொழும்பு
மாநகரப் பிரதேசத்தை
மையமாகக் கொண்ட
சிறுகதைகள்.
(ஈ) போர்காலச்
சூழலைப் பிரதிபலிக்கும்
சிறுகதைகள்.
(உ) ஆசிரியர்
தாம்பெற்ற வைத்திய
அநுபவங்களைப்
புலப் படுத்தும்
சிறுகதைகள்.
(ஊ) அகலுலகத்
தொடர்பு கொண்ட
சிறுகதைகள்.
4
யாழ்ப்பாணப்
பிரதேசத்தை மையமாகக்
கொண்ட பல சிறுகதைகளில்
ஆசிரியர் தமது
இளமைக் கால அநுபவங்களையும்
யாழ்ப்பாணச் சமூகத்தின்
இறுக்கமான சாதி
ஆசாரங்களையும்
அவற்றினால் ஏற்படும்
பாதிப்புக்களையும்
தொழில் முறைகள், உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு
முறைகள், விழாக்கள்
முதலியவற்றையும்
வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப்
பிரதேசத்தைப்
பிரதிபலிக்கும்
கதைகளுள் அதிகமானவை
1960களின்
பிற்பகுதியிலும்
1970களிலும்
எழுதி வெளியிடப்பட்டவை; அன்றைய
யாழ்ப்பாணத்து
மக்களின் வாழ்க்கை
முறைகளையும் ஏற்பட்டுவந்த
மாற்றங்களையும்
தத்ரூபமாகக் காட்டுபவை.
இன்றைய இளந்தலைமுறையினர்
பலர் அறிந்திராத
செய்திகள் பலவற்றைக்
கொண்டுள்ளவை.
ஆசிரியர்
தமது சிறுபராயத்தில்
பாடசாலையில் பெற்றுக்கொண்ட
அநுபவங்களைக்
‘காலதரிசனம்’ என்னும்
சிறுகதையில் புதுமையான
முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்று பாத்திரங்களின்
பெயர்கள் கதையின்
உபதலைப்புகளாக
இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பாத்திரமும்
தம்மைப்பற்றித்
தாமே கூறுகின்றன.
அவற்றினூடாக அன்றைய
சாதி ஆசாரங்கள், போலித்தனங்கள், ஆடை, அணிவகைகள், சடங்கு
முறைகள் முதலியவற்றையும்
கால ஓட்டத்தில்
அவற்றில் ஏற்பட்டு
வரும் மாற்றங்களையும்
கிண்டலாகவும்
நகைச்சுவையாகவும்
வெளிப்படுத்தி
யுள்ளார். அந்நாளில்
பெண்கள் மட்டுமன்றி
ஆண்களும் குடுமி
வளர்ப்பதும் கடுக்கன்
அணிவதும் சர்வசாதாரணம்.
ஆயின் இளைய தலைமுறை
இவற்றைக் கைவிடத்
தொடங்கியதை நகைச்சுவையுடன்
வெளிப்படுத்தியுள்ளார்.
கதையின் இறுதியில்
“ .......... அப்படியானால்
இப்ப நாங்கள் பிழையென்று
நினைக்கிற விஷயங்கள்
காலம் மாறினால்
பிழையற்றதாகி
விடுமோ?
காலம் மாறிக்கொண்டுதான்
இருக்கிறது!” எனத் தொடுத்திருக்கும்
வினா வாசகர்களை
ஆழமாகச் சிந்திக்க
வைக்கின்றது. சிறுகதையின்
தலையாய பண்புகளுள்
ஒன்று சிலவற்றைக்
கூறிப் பலவற்றைச்
சிந்திக்க வைப்பதாகும்.
அதே போன்று சிறுகதையின்
முடிவும் வாசகர்களை
பல மணிநேரம் சிந்திக்க
வைப்பதாக அமைதல்
வேண்டும். இவ்விரு
சிறப்புக்களையும்
ஒருங்கே இக்கதையிற்
காணலாம்.
இதே
போன்று “வாசனை” என்னும்
சிறுகதையில் எண்ண
அலை உத்தியைக்
கையாண்டு தனது
சிறுபராயத்து
அநுபவங்களையும்
அன்றைய மக்களிடம்
நிலவிய பேய் பிசாசு
பற்றிய நம்பிக்கை
களையும் தாத்தா
மீது ஆசிரியர்
கொண்டிருந்த வாஞ்சையையும்
வெளியிட்டுள்ளார்.
காலம்காலமாக
இந்துக்கள் மத்தியில்
தீபாவளிப் பண்டிகை
முக்கிய இடம்பெற்று
வருகிறது. இப்
பண்டிகையை மையமாகக்
கொண்டு இரு சிறுகதைகளை
வெவ்வேறு நோக்கில்
ஆசிரியர் படைத்துள்ளார்.
1969ஆம்
ஆண்டு ‘இதுதான்
தீபாவளி’ என்னும் சிறுகதை
வெளிவந்துள்ளது. இக்கதையில்
இரண்டு முக்கிய
விடயங்களை அவதானிக்கலாம்.
இலங்கையிலே நீண்ட
காலமாக நிலவி வந்த
இன ஒற்றுமை அரசியல்வாதிகளின்
செயற்பாட்டினால்
1950களிலிருந்து
சிறிது சிறிதாக
விரிசலடையலாயிற்று.
1983 ஆம்
ஆண்டு யூலை மாதத்தைத்
தொடர்ந்து இவ்விரிசல்
விஷ்வரூபம் பெறலாயிற்று.
பிரித்தானியராட்சிக்
காலத்தில் தென்னிலங்கையைச்
சேர்ந்த பெரும்பான்மையின
மாணவர்கள் பலர்
யாழ்ப்பாணத்திலமைந்துள்ள
பிரபல கல்லூரிகளிற்
பயின்றுள்ளார்கள்; ஆங்கில
மொழியே போதனா மொழியாக
விளங்கியதுவரை
பல்கலைக்கழகத்தில்
எல்லா இன மாணவர்களும்
ஒன்றாகவே கற்றார்கள்; ஒருவரை
ஒருவர் புரிந்து
கொண்டார்கள்; இன ஒற்றுமையும்
நிலவியது. ஆயின்
இலங்கை 1948 ஆம்
ஆண்டு சுதந்திரம்
பெற்றதையடுத்து
‘குரங்கின்
கைப்பூமாலை யாக’ பேரினவாத
ஆட்சியாளர்களின்
கைகளில் நாடு சிக்கித்
தவிக்கிறது. இத்தகைய
கெடுபிடிகள் அதிகரித்துக்
கொண்டு வரும் கடந்த
ஐம்பது வருடங்களுக்கும்
மேற்பட்ட காலப்பகுதியிலும்
இனங்களுக் கிடையிலான
ஒற்றுமை முற்றாக
அற்றுப் போய்விட
வில்லை என்பதை
நாம் நாளாந்தம்
அவதானித்துக்
கொண்டி ருக்கிறோம்.
பேரினவாத
ஆட்சியாளர்கள், இனவெறியும்
மதவெறியும் கொண்ட
‘விகாராதிபதிகள்’, அவர்களது
ஏவலாளர்களும்
கைக்கூலிகளுமான
குண்டர்கள் முதலியோரின்
செயற்பாடுகளே
‘இன முரண்பாடு’ முனைப்புப்பெற
முதன்மைக் காரணமாயின.
அதே சமயம் எமது
நாட்டில் ‘இன முரண்பாடு’ தனது உச்சத்தின்
கொடுமுடியை எட்டிக்கொண்டிருக்கின்ற
நேரத்திலும் சிங்கள, தமிழ், முஸ்லிம்
இனங்களைச் சேர்ந்த
பாமரமக்கள் மத்தியிலும்
பல்வேறு தொழில்களை
மேற்கொள்ளும்
மக்கள் மத்தியிலும்
பல்வேறு மட்டங்களைச்
சேர்ந்த புத்திஜீவிகள்
மத்தியிலும் அதிசயிக்கத்
தக்கவகையில் மிக
நெருங்கிய ஒற்றுமை
நிலவுவதை நாம்
கண்கூடாகக் காண்கின்றோம்.
ஒவ்வொரு இன மக்களிடையேயும்
காணப்படும் நல்லிதயம்
படைத்தவர்களை
நாம் சந்திக்கும்போது
“மானிடம்
இன்னும் செத்துவிடவில்லை” என்னும்
பேருண்மை குன்றின்மேல்
விளக்காகத் தெரிகின்றது.
“இதுதான்
தீபாவளி” என்னும்
சிறுகதை 1969 ஆம் ஆண்டு
வெளிவந்தது. 1958ஆம்
ஆண்டு இலங்கையில்
முதன்முதல் மிகப்
பெரிய இனக்கலவரம்
நடந்தது. இக்கால
இடைவெளிக்குள்தான்
இனங்களுக்கிடையிலான
விரிசல் ஆரம்பமாகிக்
கொண்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில்
இக்கதையின் ஆசிரியரும்
அவரது நெருங்கிய
நண்பருமான பியசேனாவும்
கொழும்பில் ஒரே
அறையில் தங்கியிருந்து
தமது தொழிலை மேற்கொண்டனர்.
பியசேனாவோ இன, சமய, மொழி, பிரதேச
வேறுபாடுகளைக்
கடந்த உயர்ந்த
மனிதாபிமானி. இந்துக்களின்
தீபாவளிப் பண்டிகையை
நேரில் பார்த்து
மகிழவும் யாழ்ப்பாண
மக்களின் வாழ்வியலைப்
பரிசீலிக்கவும்
விரும்பி யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த இந் நூலாசிரியருடன்
கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணம் நோக்கி
ஒன்றாகப் பயணிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தைச்
சென்றடைந்தபின்
கதாசிரியரின்
வீட்டில் இருவரும்
ஒன்றாகத் தங்குகின்றனர்.
இரவு துயில்கின்றனர்.
காலையில் கதாசிரியர்
எழுவதற்கு முன்பே
எழுந்து கொண்ட
அவரது அருமை நண்பரான
பியசேனா யன்னல்
திரைச் சீலையை
நீக்கிவிட்டு
மிகுந்த ஆவலோடு
எதனையோ பார்த்துக்
கொண்டிருந்தார்.
சற்றுத் தாமதமாகி
எழுந்திருந்த
கதாசிரியர் இதன்
உண்மை நிலையை உணர்ந்து, தமது நண்பனை
நோக்கி, “இது கொழும்பில்லையடா
யாழ்ப்பாணம். அதுவும்
தமிழ்ப் பண்பாடு
நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள
வாழ்க்கை முறைகளும்
பண்பாடுகளும்
வேறானவை. இங்கு
ஒரு வயது வந்த
பெண்ணை இப்படிப்
பார்ப்பதும் வர்ணிப்பதும்
குற்றமாகும் -
என்று நண்பனிடம்
சொல்ல எனக்குத்
துணிவில்லை.
ஏனென்றால்
பியசேனாவின் உயர்ந்த
மனப்பக்குவத்தைப்
பற்றி எனக்கு நன்றாகத்
தெரியும். அவனும்
நானும் கொழும்பு
மாநகரில் ஒரே அறையில்
ஆறு வருடங்களுக்கு
மேலாகக் காலத்தைக்
கடத்தி வருகிறோம்.” இக் கூற்று
எமது ஆழமான சிந்தனைக்குரியது.
இக் கூற்றினைச்
சீர் தூக்கிப்
பார்க்கும் கூர்மதி
படைத்த வாசகர்கள்
இதன் உண்மையை நன்கு
புரிந்து கொள்வார்கள்.
தீபாவளிப்
பண்டிகையானது
மிகப் புனிதமானதொரு
வழிபாடாகும். தீபாவளிப்
பண்டிகையை இந்துக்கள்
மட்டுமன்றிச்
சமணர்களும் மிக
நீண்ட காலமாகவே
மிகப் புனிதமாகக்
கொண்டாடி வந்துள்ளனர்.
இது வரலாற்று உண்மையாகும்.
ஆயின் கடந்த சில
தசாப்தங்களுள்
எல்லாமே மிக வேகமான
மாற்றங்களுக்கும்
முரண்பாடுகளுக்கும்
உள்ளாகிக் கொண்டிருப்பதை
அவதானிக்கலாம்.
இவ்வுண்மைகளையும்
ஆசிரியர் இக்கதையில்
மிக நாசூக்காக
வெளிப்படுத்தியிருத்தல்
விண்டுரைக்கத்
தக்கதொன்றாகும்.
பியசேனாவும்
கதாசிரியரும்
தீபாவளிப் பண்டிகையைக்
கண்டு களிக்க இந்துக்
கோயில் ஒன்றுக்கு
ஒன்றாகவே செல்கின்றனர்.
பக்தி சிரத்தையோடு
அங்கு நடைபெற்ற
வழிபாட்டு முறைகளையும்
பக்திப் பாடல்களின்
இனிமையையும் கண்டு
பியசேனா மெய்சிலிர்க்கின்றார்.
அவற்றை வாயாரப்
புகழ்கின்றார்.
அதனைக் கண்டு கதாசிரியர்
பெருமிதமடைகின்றார்.
கோயிலிலிருந்து
இருவரும் திரும்புகையில்
தலைவேறு உடல்வேறாக
வீதியெங்கும்
இரத்தம் தோய்ந்த
நிலையில் வாகனத்திற்
கொண்டு செல்லப்படும்
வெட்டப்பட்ட ஆடு, அதனைத்
தொடர்ந்து கதாசிரியரின்
வீட்டில் இடம்பெற்ற
தந்தையாரின் வெறியாட்டம், குடும்பத்தில்
இடம்பெற்ற அமர்க்களம், அதனைக்
கண்ட பியசேனாவின்
புரிந்துகொள்ளாமை, இவற்றையெல்லாம்
அவதா னித்துக்
கொண்டிருந்த கதாசிரியரின்
மனமுறிவு முதலியன
எமது உள்ளத்தை
மிகுதியாக நெருடுகின்றன.
அதே சமயம் எந்த
ஒரு நாணயத்துக்கும்
இரு பக்கங்களுள்ளன
என்னும் மறுக்க
முடியாத உண்மையையும்
கதாசிரியர் மிகநுட்பமான
முறையில் இக்கதையில்
புலப்படுத்தியுள்ளார்.
அதே
சமயம் தமது அருமை
நண்பன் பியசேனாவுக்குச்
சில உண்மைகளைத்
துணீகர ஆண்மையுடன்
புலப்படுத்தியிருந்தால்
இக்கதை மேலும்
சிறந்திருக்கும்
என்பதில் எவ்வித
ஐயமும் இல்லை.
அதாவது இந்துக்களின்
பண்டிகைகளில்
மட்டுமல்லாது
பௌத்த மதத்தவர்களின்
புனித பண்டிகைகள்
பலவற்றிலும் இவ்விரு
முரண்பட்ட தன்மைகளும்
தாராளமாக இடம்பெற்று
வருவதையும் இன்றைய
மாறுதல்களையும்
சுட்டிக் காட்டியிருத்தல்
வேண்டும்.
அடுத்ததாக
1964 ஆம்
ஆண்டு வெளிவந்த
‘தீபாவளிப்
பரிசு’ என்னும்
சிறுகதை வேறொரு
வகையில் சில உண்மைகளைப்
புலப்படுத்தி
நிற்கிறது. தைப்பொங்கல், வருடப்
பொங்கல், தீபாவளி முதலிய பண்டிகைகளைப்
பெரியவர்களிலும்
பார்க்கச் சிறியவர்களே
மிக்க ஆவலுடன்
எதிர்பார்த்து
மகிழ்ச்சிகரமாகக்
கொண்டாட முயல்கின்றனர்.
இப்பண்பு இந்துக்கள்
மத்தியில் மட்டுமன்றிச்
சகல மதத்தவர்கள்
மத்தியிலும் காணப்படுகின்றது.
சமூகத்தின் மேல்
தட்டு வர்க்கத்தினரதும்
மத்தியதர வர்க்கத்தினரதும்
குழந்தைகளுக்கு
இத்தகைய பண்டிகைகள்
பேரானந்தத்தை
அளிக்கின்றன. ஆயின்
சகல மதங்களையும்
சேர்ந்த அடிநிலை
மக்களது குழந்தைகளுக்கு
இவையே பெரும் ஏக்கத்தையும்
தாழ்வுச் சிக்கல்களையும், மன உளைச்சல்களையும்
ஏற்படுத்துகின்றன
என்னும் பேருண்மையை
முரண்பட்ட இரு
வர்க்கங்களின்
செயல்களினூடாக
அற்புதமான முறையில்
வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்மைக்கும்
நம்பிக்கைக்கும்
தியாகத்துக்கும்
பேர்போன வளும்
வறுமையில் வாடுபவளுமான
நாகம்மா, அவளது சிறுவயது
மகள், செல்வந்தரும்
பெரியவரும் நல்லவருமான
பொன்னம்பலம் ஆகியோரைப்
பிரதான பாத்திரங்களாகக்
கொண்டு கதையினைப்
படைத்துள்ள ஆசிரியர்
அப் பாத்திரங்களினூடாகப்
பல அரிய உண்மைகளையும்
வெளியிட்டுள்ளமை
விண்டுரைக்கத்தக்க
தொன்றாகும். இம்
மூன்று பாத்திரங்களும்
வாசகர் மனதில்
நீங்கா இடத்தினைப்
பெறும் என்பதில்
ஐயமில்லை.
நாகம்மாவின்
மகள் சாந்திக்குப்
புதுச்சட்டை வாங்குவதற்கு
வேறு வழியற்ற நிலையில்
பொன்னம்பலத்தின்
குழந்தை ராணியின்
சங்கிலியை நாகம்மா
களவாட எண்ணுகிறாள்.
இதனை அவதானித்த
சாந்தி அதனைத்
தடுக்கிறாள். அக்
கட்டத்தில் தாய்க்கும்
மகளுக்கும் இடையே
இடம்பெறும் உரையாடல்
மிகவும் சுவாரஸ்யமாகக்
காணப்படுகிறது.
மறைவில் நின்று
இவற்றை அவதானித்த
பொன்னம்பலம் மறுநாள்
நாகம்மாவைத் தன்னிடம்
வரும்படி ஆளனுப்புகின்றார்.
நாகம்மா
தலை குனிந்தபடியே
பொன்னம்பலத்தின்
முன்னால் நின்றாள்.
பொன்னம்பலம் அவளை
நோக்கி,
“ ......... நாகம்மா நீ
ஆண்டாண்டு காலமாகக்
கட்டி வளர்த்த
நேர்மையென்ற கோட்டையை
உனது பிள்ளைப்
பாசந்தான் தகர்த்தெறிந்தது.
ஆனால்
உனது குழந்தை உனக்குக்
கூடாத பெயரேற்படாது
காப்பாற்றியிருக்கிறாள்.
அவளின் உயரிய உள்ளம்
என்னை மிகவும்
கவர்கிறது. நான்
தரும் இந்தத் தீபாவளிப்
பரிசை அவளிடம்
கொடு. அவளைக் கடவுள்
ஒரு குறையுமில்லாமல்
என்றும் காப்பாற்றுவார்.” எனக் கூறுகிறார்.
பெரியவர் பொன்னம்பலம்
இவ்விடத்தே உண்மையிற்
பெரியவராகவே தோற்றம்
தருகின்றார்.
பல்வேறு
காரணங்களால் ஏறத்தாழக்
கடந்த இருபது ஆண்டுகளில்
யாழ்ப்பாணத்தின்
இறுக்கமான சாதியமைப்பு
முறை, சாதியாசாரங்கள், ஒடுக்குமுறை
முதலியன அதிகம்
தளர்ந்துள்ளன.
1960களிலும்
1970களிலும்
சாதீயத்திற்கெதிரான
போராட்டங்கள்
மிகவும் உக்கிரம்
பெற்றன. எனினும்
அக்காலப் பகுதியிலும்
சாதி அடக்குமுறைகளும்
ஒடுக்கு முறைகளும்
தொடர்ந்து கொண்டி
ருந்ததை அவதானிக்கலாம்.
மிகநீண்ட காலமாகவே
யாழ்ப்பாணப் பிரதேசத்தில்
வேளாளரே நிலவுடமையாளர்களாக
விளங்கினர். தாழ்த்தப்பட்ட
மக்கள் வேளாளரால்
வழங்கப்படும்
சிறு துண்டு நிலத்திலேயே
குடியிருந்துகொண்டு
வேளாளருக்கு அடிபணிந்து
அவர்களுக்குக்
கடூழியம் செய்துகொண்டிருந்தனர்.
அவர்களது நிலங்களிலுள்ள
தென்னைமரங்களையும், பனைமரங்களையும்
தமது சீவனோபாயத்துக்காகப்
பயன்படுத்திச்
சீவல் தொழிலை மேற்
கொண்டனர். இதனால்
வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு எத்தகைய
அநீதிகளை இழைத்தாலும்
அவற்றைப் பொறுத்துக்
கொண்டு அவர்கள்
தயவில் வாழ வேண்டியேற்பட்டது.
இவற்றை மையமாகக்
கொண்டு ஞானசேகரன்
சில கதைகளைப் படைத்துள்ளார்.
1970 ஆம்
ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட
‘பலி’ என்னும்
கதையில் வரும்
கந்தையாக் கமக்காரன்
சாதித் திமிர்
பிடித்த வேளாளரின்
அசல் பிரதிநிதியாகவும்
அவருக்கு அடங்கி
ஒடுங்கி வாழும்
தாழ்த்தப்பட்ட
மக்களின் பிரதிநிதியாக
வேலனும் இக்கதையில்
படைக்கப்பட்டுள்ளனர்.
வேலன் தனது சீவல்
தொழிலை மேற்கொண்டு
நாள்தோறும் கமக்காரனுக்கு
இனாமாகக் கள்ளுக்கொடுக்க
வேண்டும். அத்துடன்
கமக்காரனின் பயிர்ச்செய்கைக்கும்
உதவி செய்தல் வேண்டும்.
கமக்காரனது கட்டளைகளுக்கு
அடிபணிந்து நடக்க
வேண்டும்.
பலத்த
மழையின்போது கமக்காரனின்
அழைப்பையேற்று
வேலன் அவரது வீட்டிற்குச்
செல்கின்றான்.
மழைக்கு ஒதுங்குவதற்காக
வேலன் கமக்காரனின்
வீட்டு வாசற்படியில்
கதவோரமாக நிற்கின்றான்.
இதனை அவதானித்த
கமக்காரன், “இறங்கடா
பணிய கீழ்சாதி!
வீட்டுக்குள்ளயும்
வந்து விடுவாய்
போலைகிடக்கு.” எனக் கண்டிக்கிறார்.
இளந்தம்பதிகளான
வேலனும் வள்ளியும்
கமக்காரனது நிலத்தின்
ஒரு பகுதியிலேயே
சிறு குடிசையில்
வாழ்ந்து வருகின்றனர்.
இளமையும் அழகும்
நிறைந்த வள்ளியைச்
சுவைக்கக் கமக்காரன்
திட்டமிடுகிறார்.
சுன்னாகத்தில்
தனது பெற்றோருடன்
தங்கியிருக்கும்
தனது மனைவியிடம்
கடிதம் ஒன்றைச்
சேர்க்குமாறு
வேலனை அனுப்பிவிட்டு
வள்ளியிடம் தனது
வீட்டிற்குக்
கள்ளுக்கொண்டு
வருமாறு கட்டளையிடுகிறார்.
அவரது
கட்டளைப்படி வள்ளியும்
கள்ளுடன் அவரது
வீட்டிற்குச்
செல்கிறாள். வீட்டு
வாசற்படியில்
மிதித்ததற்காக
வேலனைத் திட்டிய
கமக்காரன் வள்ளியை
உள்ளே வரும்படி
அழைக்கிறார். வள்ளி
முதலில் உள்ளே
செல்ல மறுக்கிறாள்.
கமக்காரனின் கண்டிப்பினைத்
தொடர்ந்து உள்ளே
சென்ற வள்ளியைப்
பாலியல் வல்லுறவுக்குட்
படுத்துகின்றார்.
அவரது இச்சைக்கு
மறுத்த வள்ளி அவரின்
கன்னத்தில் ஓங்கி
அறைகிறாள். ஆத்திரம்
கொண்ட கமக்காரன்
அவளது கையைப் பிடித்துத்
திருகி மயக்கமுறச்
செய்த பின்னரே
உறவு கொள்கிறார்.
மயக்கம் தெளிந்த
பின்னர் எழுந்த
வள்ளி “நீயும்
ஒரு மனிசனே! பெரிய
சாதிக்காறனே? சீ! தூ ....” எனக் காறியுமிழ்ந்துவிட்டுச்
செல்கிறாள். அவளால்
வேறென்ன செய்ய
முடியும். இது
ஆசிரியரது வெறுமனே
கற்பனையல்ல, யாழ்ப்பாணத்தில்
மட்டுமன்றி இந்தியாவிலும்
நிலவுடமையாளர்களின்
தயவில் வாழும்
தாழ்த்தப்பட்ட
மக்கள் மத்தியில்
வாழும் இளம் பெண்கள்
நிலவுடைமையாளர்களின்
காமப்பசிக்கு
இரையாகி வந்தமை
வரலாற்றுண்மையாகும்.
இக்கதையில்
சூசகமாக இன்னோர்
விடயத்தையும்
வெளிப்படுத்தியுள்ளார்.
வேலனும் வள்ளியும்
அன்புடன் வளர்த்து
வந்த கறுப்பி என்னும்
பெண் நாய் எப்பொழுதும்
வள்ளிக்குக் காவலாகத்
திரியும். கமக்காரன்
வீட்டை நோக்கி
நடந்த வள்ளியைப்
பின் தொடர்ந்து
கறுப்பியும் செல்கிறது.
கறுப்பியை ஓர்
ஆண் நாய் பின்
தொடர்கிறது. அதனை
விரும்பாத கறுப்பி
ஆண் நாயை நோக்கி
எச்சரிக்கை செய்கிறது.
சற்று நேரம் பின்
தொடர்ந்த ஆண் நாய், கறுப்பி
இடம் கொடுக்காததால்
தூரத்தே போய்க்
கொண்டிருந்தது.
கமக்காரனின் வீட்டுக்குள்ளே
வள்ளிக்குத் தீங்கிழைக்கப்படுவதை
உணர்ந்து கொண்ட
கறுப்பி முதலில்
உறுமிக் கொண்டிருந்தது.
பின்னர் பலத்த
குரலில் ஊளையிடத்
தொடங்கியது என
ஆசிரியர் காட்டுவது
மிகவும் பொருத்தமானதே.
மனிதர்களிலும்
பார்க்க மிருகங்களுக்கு
‘உணர்திறன்’ அதிகம்
என்பதை அண்மையில்
நடந்த ‘சுனாமி’ அநர்த்தத்தின்
போதும் பலரும்
சுட்டிக் காட்டியிருந்தனர்.
ஆசிரியர்
இங்கு மேலுமோர்
உண்மையைச் சுட்டிக்
காட்டியுள்ளார்.
ஆண் நாய்க்கிருக்கும்
ரோச உணர்வு கூட
அந்தக் கமக்காரனுக்கு
இருக்கவில்லை.
வள்ளியிடம் அடிவாங்கிய
பின்னரும் கமக்காரன்
வள்ளியைப் பலாத்காரமாகச்
சுவைக்கின்றார்.
மேற்கண்ட
சாதிப்பிரச்சனையை
வேறொரு கோணத்தில்
நோக்குவதாக “எங்கோ ஒரு
பிசகு” என்னும்
கதை அமைந்துள்ளது.
ஆறுமுகத்தார், செல்லத்துரையர், முத்தன், சண்முகம்
ஆகிய நான்கு பாத்திரங்களைக்
கொண்டு அவற்றுக்கிடையிலான
உரையாடல்கள், செயல்கள், எண்ணங்கள்
முதலியவற்றினூடாக
யாழ்ப்பாணத்துச்
சாதிமான்களின்
சாதித்திமிரையும்
தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த
முதிய தலைமுறையினரின்
அடங்கி ஒடுங்கி
வாழும் போக்கினையும்
இளந் தலைமுறையினர்
பலர் தமது குலத்தொழிலைக்
கைவிட்டுக் கல்வித்துறையில்
முன்னேறுவதையும்
ஆசிரியர் தத்ரூபமாகக்
காட்டியுள்ளார்.
ஆறுமுகத்தாரும்
செல்லத்துரையரும்
இளமைப் பருவத்தி
லிருந்தே நெருங்கிய
நண்பர்கள். நீண்டகாலம்
செல்லத்துரையர்
கொழும்பில் வாழ்ந்த
காரணத்தினாற்போலும்
அவரிடம் சாதித்திமிர்
மிகவும் குறைந்து
காணப்பட்டது. ஆயின் யாழ்ப்பாணத்தில்
நிலவுடைமையாளராகவும்
ஊர்ப் பெரியவராகவும்
திகழ்ந்த ஆறுமுகத்தாரிடம்
வயதான நிலையிலும்
சாதித்திமிர்
அவரை ஆட்டிப் படைப்பதை
ஆசிரியர் துல்லியமாகக்
காட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த
முத்தனிடம் தினமும்
கள்ளு வாங்கிச்
சுவைக்கும் ஆறுமுகத்தார்
கொழும்பில் உயர்பதவி
வகிக்கும் முத்துவின்
மகனான சண்முகம்
வீட்டில் தேநீர்
அருந்த மறுப்பதுமல்லாமல்
“என்னுடைய
மகனுக்கு வேலை
கிடைக்காவிட்டாலும்
பரவாயில்லை. நான் உன்னுடைய
வீட்டில ..... தேத்தண்ணி
குடிக்க மாட்டேன்.” எனச்
சண்முகத்திடம்
நெற்றியிலடித்தாற்
போலக் கூறுகின்றார். “முத்தனுடைய
மகன் தன்னுடைய
வீட்டில் கொடுத்த
தேத்தண்ணியைக்
குடிக்கக் கூடாதெண்டால்
முத்தன் கொடுக்கும்
கள்ளை மட்டும்
குடிக்கலாமோ?” எனச் செல்லத்துரையர்
ஆறுமுகத்தாரை
நோக்கிக் கேட்டதும்
ஆறுமுகத்தாருக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
“பனை கொடியேறும்
காலத்தில் .... எனத்
தொடங்கும் கதையின்
ஆரம்பம் சில தசாப்தங்களுக்கு
முற்பட்ட யாழ்ப்பாணத்தை
அப்படியே படம்
பிடித்துக் காட்டுவதாக
அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில்
பிறந்து வளர்ந்த
சாதிமான்கள் கூட
கொழும்பில் வாழத்
தொடங்கியதும்
சாதித்திமிர்
படிப்படியாக அடங்கிப்
போவதை மிகுந்த
நகைச் சுவையுடன்
‘உள்ளும்
புறமும்’ என்னும் கதையில்
வெளிப்படுத்தியுள்ளார்.
‘இதிலென்ன
தவறு?’ என்னும்
கதையிலும் சாதிப்
பிரச்சினையையும்
காதலையும் இழையோட
விட்டுள்ள ஆசிரியர்
சாதிப் பிரச்சினை
காதல் தோல்விக்குக்
காரணமாக அமைவதையும்
சுட்டிக் காட்டியுள்ளார்.
‘கட்டறுத்த
பசுவும் ஒரு கன்றுக்குட்டியும்’
என்னும்
கதையிலும் சாதி
ஆசாரமுறைகள் காட்டப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த
பெண்கள் வேளாளரின்
வீடுகளில் ‘எடுபிடி’ வேலைகள்
செய்தல், மிகவும் பணிவாக
நடந்து கொள்ளுதல், சிரட்டையில்
தேநீர் குடித்தல்
முதலிய அன்றைய
நிலைமைகளை ஆசிரியர்
வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கதையில் சாதிப்
பிரச்சினை முனைப்புப்
பெறவில்லை. ஆயின் தாய்மை, குழந்தைப்பாசம்
முதலியன தொடர்பாகக்
கிராமப்புறத்துப்
பெண்களுக்கும்
நவநாகரிக நங்கையருக்குமிடையிலான
முரண்பாடுகளை
உள்ளத்திற் பதியுமாறு
அற்புதமான முறையிலே
வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கதையிலே
கிராமப்புறத்துப்
பெண்களைப் பிரதிநிதித்துவப்
படுத்தும் பாத்திரமாகத்
தாழ்த்தப்பட்ட
குலத்தைச் சேர்ந்த
கதிரியையும் நவநாகரிகப்
பெண்களைப் பிரதிநிதித்துவப்
படுத்தும் பாத்திரமாக
வேளாளர் குலத்தைச்
சேர்ந்த வசந்தியையும்
படைத்துள்ளார். பிள்ளைகள்
பலவற்றைப் பெற்று
அவை ஒவ்வொன்றுக்கும்
குறைந்தது இரண்டு
வருடங்களுக்குத்
தாய்ப்பாலூட்டி
வளர்த்த கதிரியின்
உடற்கட்டும் அழகும்
குலையாதிருப்பதைக்
கண்டு நவநாகரிக
நங்கையான வசந்தி
வியப்படைகிறாள். யாழ்ப்பாணத்தில்
பிறந்து வளர்ந்தாலும் திருமணத்தின்
பின் கொழும்பிலே
வாழத் தொடங்கியதும்
கொழும்பு நாகரிகம்
அவளைப் பற்றிக்
கொண்டது. நவநாகரிகப்
பண்புகளுள் ஒன்று
பெண்கள் தமது கட்டழகைப்
பாதுகாப்பதாகும். குழந்தைகளை
அதிகம் பெறக் கூடாது.
பெறுகின்ற ஒன்றிரண்டு
குழந்தைகளுக்குக்
கூடப் போதிய அளவு
தாய்ப் பால் கொடுக்கக்
கூடாது.
அவ்வாறு கொடுத்தால்
கட்டழகு குலைந்து
விடும் என்ற கொள்கையைக்
கடைப்பிடிக்கும் வசந்திக்கும்
பல பிள்ளைகளைப்
பெற்றுத் தாய்ப்பாலூட்டி
வளர்த்த பின்பும்
கட்டழகு குலையாதிருக்கும்
கதிரிக்குமிடையே
இடம் பெறும் உரையாடலானது
மிகவும் சுவாரஸ்யமாக
அமைந்துள்ளது.
தாய்ப்பசு
தன் கன்றுக்குப்
பால் கொடுக்கும்
நேரம் வந்தும்
பால் கொடுக்க முடியவில்லையே
என்னும் தாய்மையுணர்வு
மீதூரப்பெற்ற
நிலையில் கட்டினை
அறுத்துக் கன்றுக்குப்
பாலூட்டும் நிகழ்ச்சியும்
தாழ்த்தப்பட்ட
குலத்தைச் சேர்ந்த
கதிரி தாய்மை மீதூரப்பெற்ற
நிலையில் உயர்த்தப்பட்ட
குலத்தைச் சேர்ந்தவளான
வசந்தியின் குழந்தை
கதறித் துடிப்பதைக்
கண்டு அதற்குப்
பாலூட்டும் நிகழ்ச்சியும்
தாய்மையின் மேன்மையினை
வெளிப்படுத்துவனவாக
அமைந் துள்ளன. கதிரிக்கும்
பசுவுக்கும் முன்னால்
வசந்தி ஒரு அற்பப்
புழுவாகக் காட்சியளிக்கிறாள்.
‘ஒளியைத்
தேடி’ என்னும்
சிறுகதை யாழ்ப்பாணத்து
மக்களிடம் காணப்படும்
சீதனமுறை, மாற்றுக்
கல்யாணம், அவற்றினடியாகத்
தோன்றும் பல்வேறுபட்ட
பிரச்சினைகள்
முதலியவற்றைச்
சித்தரிப்பதாக
அமைந்துள்ளது.
தாய் தந்தையரை
இழந்த நிலையில்
முப்பது வயதாகியும்
சீதனப் பிரச்சினை
காரணமாகத் திருமணம்
முடிக்காத தங்கையின்
மீது அளவு கடந்த
பாசம் கொண்ட அண்ணன்
தனது தங்கையின்
நல்வாழ்வுக்காக
மாற்றுக் கல்யாணத்தின்
மூலம் பிறவிக்குருடி
ஒருத்தியைத் திருமணம்
செய்ய முடி வெடுக்கிறான். அண்ணன் மீது
அளவு கடந்த பாசம்
கொண்ட தங்கையோ
“அண்ணா!
உனக்கு மட்டும்
தான் தியாகம் செய்யத்
தெரியுமென்று
எண்ணாதே. நான்
உன்தங்கை எனக்கும்
செய்யத் தெரியும்.” என முடிவு
செய்து கொண்டு
தன்னை விரும்பிய
வயதான தரகர் பொன்னம்பலத்தைத்
திருமணம் செய்யும்
பொருட்டு கலங்கும்
கண்களால் மானசீகமாக
அண்ணனிடம் விடைபெற்றுக்
கொண்டு வீட்டை
விட்டு வெளியேறும்
காட்சி உள்ளத்தை
உலுக்குவதாகும்.
‘சங்கு
சுட்டாலும் ......’,
‘ஒரு
சின்னப்பையன்
அப்பாவாகிறான்’ ‘ராக்கிங்’ முதலிய
கதைகளும் ஆசிரியரது
இளமைக்கால அநுபவங்களை
வெளிப்படுத்துவனவாக
அமைந்துள்ளன. காதலின்
கூத்தையெல்லாம்
வெளிப்படுத்துவதாக
‘குமிழி’ என்னும்
கதை அமைந்துள்ளது.
5
மலையகப்
பிரதேசத்தை மையமாகக்
கொண்டு ‘சீட்டரிசி’, ‘திருப்புமுனைத்
தரிப்புகள்’, ‘இப்படியும்
ஓர் உறவு’, ‘பிறந்த
மண்’ முதலியகதைகளைப்
படைத்துள்ளார்.
மலையகப் பிரதேசத்தை
மையமாகக் கொண்டு
ஆசிரியர் படைத்துள்ள
‘குருதி
மலை’, ‘லயத்துச்
சிறைகள்’, ‘கவ்வாத்து’ ஆகிய நாவல்கள்
பலரதும் பாராட்டுதல்களைப்
பெற்றமை மனங்கொளத்தக்கது.
கடந்த
நான்கு தசாப்தங்களுக்கும்
மேலாக மலையகத்தில்
வைத்திய அதிகாரியாகக்
கடமையாற்றிவரும்
இந்நூலாசிரியர், தாழ்வுற்று
வறுமை மிஞ்சிச்
சுதந்திரம் தவறிக்
கெட்டுப் பாழ்பட்டு
நிற்கும் மலையகத்
தொழிலாளர் சமூகத்தின்
விமோசனத்திற்காக
வைத்தியப் பணியினை
மட்டுமன்றி எழுத்துப்
பணியினையும் மேற்கொண்டு
வருபவர்.
மலையகத்
தொழிலாளர்களின்
வரலாறே சோக மயமானது; இருள்
சூழ்ந்தது. அவர்களுள்ளும்
பெண்களின் நிலைமை
சொல்லுந்தரமன்று.
பெண் அடிமைத்தனத்தின்
உச்சநிலையை மலையகத்திற்
காணலாம். தோட்டங்களின்
உயர் அதிகாரிகள்முதல்
கீழ் அதிகாரிகள்வரை
பெண்களைப் பல்வேறு
கொடுமைகளுக்கும்
உள்ளாக்குவதை
அவதானிக்கலாம். அறியாமையும்
வறுமையும் நிறைந்த
தொழிலாளர்கள்
மத்தியில் கல்வி
வாசனை என்பது நீண்ட
காலமாக அருகியே
காணப்பட்டது. தொழிலாளர்களின்
பிள்ளைகள் கல்வி கற்பதற்குச்
சாதகமான சூழ்நிலை
மிக அண்மைக்காலம்
வரை மிகவும் அருகியே
காணப்பட்டது. தோட்டங்களின்
உயர்நிலை அதிகாரிகள்
முதல் கீழ்நிலை
அதிகாரிகள் வரை
அவர்கள் தொழிலாளர்களை
மந்தைக் கூட்டமாகவே
நீண்ட காலமாகக்
கருதிவந்துள்ளனர்.
தங்களது பிள்ளைகளை
மட்டும் பிரபல
கல்லூரிகளில்
சேர்த்து உயர்
கல்வியை அவர்களுக்குப்
பெற்றுக் கொடுக்க
முயன்று வந்துள்ளனர்; அதற்கேற்ற
வகையில் அவர்களது
பொருளாதார நிலையும்
சாதகமாக அமைந்தது.
ஆயின்
தொழிலாளர்களது
பிள்ளைகள் சாதாரண
கல்வியைக் கூடப்
பெறமுடியாத வகையில்
தோட்டத்து அதிகாரிகள்
நீண்ட காலமாக வியூகம்
வகுத்துக் கொண்டிருந்தனர்.
தொழிலாளியை நோக்கி, “உன்னுடைய
பிள்ளை படித்துத்
தோட்டத்துரையாகவா
வரப் போகிறான்? எவ்வளவு
தான் படித்தாலும்
கடைசியில் மண்வெட்டியும், கவ்வாத்துக்
கத்தியும், சுரண்டியுமாகத்
தோட்டங்களில்
தான் வேலை செய்யப்
போகிறான்” எனத் தொழிலாளர்களின்
மனதில் தாழ்வு
மனப் பான்மையையும்
நம்பிக்கையீனத்தையும்
ஏற்படுத்துவதில்
நீண்டகாலமாக முனைப்புடன்
செயற்பட்டு வந்துள்ளனர். பத்தொன்பதாம்
நூற்றாண்டின்
நடுப்பகுதியில்
“பாடசாலைகள்” என்ற பெயரில்
தொழிலாளர்களின்
பிள்ளைகள் பெருந்தோட்டப்
பயிர்களுக்குத்
தீங்கேதும் விளைவிக்காத
வகையில் பகல்நேரத்தில்
அவர்களை அவற்றில்
அடைத்து வைத்திருந்தார்கள்.
காலப்போக்கில்
இத்தகைய நிலைமைகள்
படிப்படியாக மாறத்தொடங்கின.
தொழிலாளர்களும்
எமது பிள்ளைகள்
படித்துப் பெரிய
உத்தியோகமா பார்க்கப்
போகிறார்கள். வயிற்றைக்
கட்டி வாயைக் கட்டி
அவர்களைப் படிப்பிக்க
வைத்தாலும் பிரசாவுரிமை
இல்லாததன் காரணமாக
அரசாங்க உத்தியோகம்
எதனையும் பெற முடியாது. அந்நிலையில்
கல்விகற்ற தொழிலாளர்களாகவே
அவர்கள் விளங்க
முடியும் என்ற
கருத்து நிலையும்
அவர்களிடையே நீண்ட
காலமாக நிலவிவந்துள்ளது.
இவற்றையெல்லாம்
கதாசிரியர் இரத்தினச்
சுருக்கமாகச்
‘சீட்டரிசி’, ‘திருப்புமுனைத்
தரிப்புகள்’ முதலிய
சிறுகதைகளில்
வெளிப்படுத்தியுள்ளமை விண்டுரைக்கத்தக்க
தொன்றாகும். ‘திருப்புமுனைத்
தரிப்புகள்’ என்னும்
கதையில் இடம் பெறும்
தொழிலாளியான பெருமாள்
தனது மகனை எப்பாடுபட்டேனும்
கல்வி கற்கவைத்து
அரச உத்தியோகம்
வகிக்கச் செய்யவேண்டும்
எனக் கனவு காண்கின்றான்; அதற்காக
எத்தகைய தியாகங்களையும்
செய்யத் தயாராகின்றான்.
ஆயின் முடிவில், “ஏன்டா தங்கராசு
நீயும் பேர் பதிஞ்சு
வேலைக்கு வந்துட்டியா.
ஒங்கப்பன் பெரிசா
ஒன்னைப் படிக்க
வைக்கிறேன்னு
சம்புராயம் புடிச்சானே
..... முடிஞ்சுதா...? வாழையடி
வாழையா நீங்கெல்லாம்
பத்தடிக் காம்பராவில
கத்தியும் சுரண்டியுமா
வாழ வேண்டியவங்கன்னு
அன்னிக்கே சொன்னேனே......
ஒங்கப்பன் கேக்கலியே......
அடேய் நீயும் ஒங்கப்பன்
கூட கவ்வாத்து
வெட்டப்போடா......
அப்பதான் தோள்பட்டை
கழண்டு வரும்.
ஒங்களுக்கெல்லாம்
புத்தி வரும் ......” கண்டக்டரின்
குரலில் ஏளனம்.
தான் ஜெயித்து
விட்டதில் ஏற்பட்ட
மமதை என்ற வரிகள்
வாசகரின் மனதில்
சுரீரெனத் தைக்கின்றன.
தொழிலாளியின்
மகன் தொழிலாளியாகத்தான்
ஆகவேண்டுமா என்ற
ஏக்கம் ஏற்படுகின்றது. முடிவில், பெருமாள்
கண்ட கனவாக அது
காட்டப்படும்
விதம் ஆசிரியரின்
கதையாக்கத் திறனுக்குச்
சான்றாக அமைகிறது.
கதையின்
இறுதி முடிவில்
தங்கராசு வைராக்கியத்துடன்
மீண்டும் படிக்கத்
தொடங்குவதாகக்
காட்டியதன் மூலம்
தொழிலாள சமூகத்திற்கு
ஒரு நம்பிக்கை
ஒளிக்கீற்றை ஆசிரியர்
காட்டுகிறார். தொழிலாளர்
மத்தியில் தன்னம்பிக்கை
பிறந்து கல்வியில்
நாட்டம் செலுத்தக்கூடிய
வாய்ப்பை இக்கதை
ஏற்படுத்துகிறது.
‘சீட்டரிசி’
என்னும்
கதையில் வரும்
பார்வதியும் கந்தையாவும்
நெஞ்சில் நிலைக்கும்
பாத்திரங்களாக
விளங்குகின்றனர். வாசகர்கள்
சற்றும் எதிர்பாராத
திருப்பத்துடன்
கதை முடிவடைவதும்
சிந்தனையைத் தூண்டும்
வகையில் அமைந்துள்ளது.
கதாசிரியர்
மலையகத்தில் நீண்டகாலமாகக்
கடமையாற்றிப்
பெற்றுக் கொண்ட
அநுபவங்களுட்
சிலவும் அவரது
கதைகளில் வெளிப்பட்டுள்ளன. மலையகத்
தொழிலாளர் சமூகத்திலும்
சாதி ஏற்றத் தாழ்வு
நிலவுவதையும்
அது காதலுக்குத்
தடையாக அமைவதையும்
நெஞ்சை உருக்கும்
வகையில் ‘இப்படியும்
ஓர் உறவு’ என்ற கதையில்
வெளிப்படுத்தியுள்ளார்; கூடவே தொழிலாளர்கள்
மத்தியில் நிலவும்
மூடநம்பிக்கைகளையும்
பெண் அடிமைத்தனத்தையும்
புலப் படுத்தியுள்ளார்.
இவ்வுலகில் எவரும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் அலாதியான பற்றினைக் கொண்டிருப்பர்; பிறந்த மண் தெய்வம் மாதிரி என்பர். ‘பிறந்த மண்’ என்னும் கதையில் ஆசிரியர் இதனைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றார். பிரித்தானியராட்சிக் காலத்தில் மாணிக்கத்தேவர் தமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்தாலும் தொழில் நிமித்தம் மலையகத்திலே குடியேறி நீண்டகாலம் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்த பின் இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்குத் திரும்பவேண்டியேற்படுகின்றது. மாணிக்கத்தேவருக்கும் பிறந்த மண்ணில் இறுதிக்காலத்தைக் கழிக்கப் போவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி. அவருக்கு ஒரேயொரு மகன். மகன் பிறந்த மறுவருடமே தாய் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள். மாணிக்கத்தேவர் அரும்பாடுபட்டு மகனை வளர்த்துக் கல்வியிலும் முன்னேற்றம் காணச் செய்கின்றார். எனினும் பிரசா உரிமைப் பிரச்சினை காரணமாக மகனுக்கு அரசாங்கத் தொழில் எதுவுமே கிடைக்கவில்லை, அதனால் அவனும் தொழிலாளியாகவே வாழ்கின்றான். மாணிக்கத்தேவருக்குள்ள ஒரேயொரு சொத்து அவரது மகனே. மகனையும் தன்னுடன் இந்தியாவிற்கு வருமாறு அழைக்கின்றார். மகனோ தான் பிறந்து வளர்ந்த மலையகத்தைப் பிரியமறுக்கிறான். தந்தைக்குப் பிறந்த மண் தமிழ்நாடு. மகனுக்குப் பிறந்த மண் மலைநாடு. இருவருக்குமிடையிலான பாசப் பிணைப்பினையும் இருவரும் பிறந்த மண்மீது கொண்டிருந்த பற்றினையும் ஆசிரியர் வெளிப்படுத்தும் திறன் பாராட்டத்தக்கதாகும். அதே சமயம் மாணிக்கத் தேவரின் வாī