மனந்திறந்து சிலவார்த்தைகள்...

 

               

                எனது முதலாவது சிறுகதை பிழைப்பு’ 1964ஆம் ஆண்டு கலைச்செல்விமாசி இதழில் வெளியானது. தொடர்ந்துவந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளில், முப்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

                1995களில் இடம்பெற்ற இடப்பெயர்வின்போது, யாழ்ப் பாணத்தில் எனது இல்லத்தில் சேர்த்து வைத்திருந்த நூல்கள் யாவும் தொலைந்துவிட்டன. இதன் காரணமாகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் முடங்கிக்கிடந்த எனது சிறுகதைகள் பலவற்றை இழந்துவிட்டேன். தற்போது தேடிப்பெற்ற சிறுகதைகள் சிலவும், எனது முன்னைய தொகுப்புகளில் இடம்பெற்ற சிறுகதைகளும், சமீப காலத்தில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. தொலைந்துபோன எனது கதைகளைத் தேடிப்பெற்று இத்தொகுப்பின் இரண்டாவது தொகுதியினையும்  வெளிக்கொணர எண்ணியுள்ளேன்.

                இந்நூல் வெளிவருவதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்என்ற எனது முன்னைய சிறுகதைத்தொகுதி தற்போது இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டப்படிப்பிற்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் அப் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனது கண்டி இல்லத்திற்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக அச்சிறுகதைத்தொகுதியின் பிரதிகள் யாவும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்நிலையில் அச்சிறுகதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பினை வெளிக்கொணர எண்ணினேன். அது தொடர்பாக நண்பர் புலோலியூர் க.சதாசிவம் அவர்களுடன் கலந்தாலோசித்தபோது, “தற்போது நீங்கள் மணிவிழா வயதினைத் தாண்டியுள்ளீர்கள். இனிமேல் சிறிய தொகுதிகளை வெளிக் கொணருவதை விடுத்து நீங்கள் எழுதிய சிறுகதைகள் யாவற்றையும் தொகுத்து நூலாக்க முயற்சி எடுக்கவேண்டும். மூத்த எழுத்தாளர்கள் பலரும் அவ்வாறே இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்என ஆலோசனை கூறினார்.

                எனது மகன் பாலச்சந்திரனும் எனது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெறவேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அடிக்கடி தூண்டிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்என்ற சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பினை வெளிக்கொணரும் எனது விருப்பத்தினையும் நண்பரின் ஆலோசனையும், மகனின் வேண்டுகோளையும் ஒன்று சேரச் செயற்படுத்தும் நோக்குடன் இத்தொகுதி தி. ஞானசேகரன் சிறுகதைகள்என்ற மகுடத்தில் ஞானம் பதிப்பகவெளியீடாக வெளிவருகிறது. இத்தொகுப்பிலுள்ள முதல் பதினொரு கதைகளும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளாகும்.

                நான் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்ட கடந்த நாற்பது வருடகாலத்தில் ஈழத்தின் இலக்கியச் செல்நெறியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களின் தாக்கங்கள் எனது எழுத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. எனது நோக்கிலும் போக்கிலும் ஏற்பட்டுவந்த மாறுதல்களை இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் சுட்டி நிற்கும். அதுவே இத்தொகுப்பின் முக்கியமான அம்சமென நான் கருதுகிறேன்.

                நான் எழுதத்தொடங்கிய காலகட்டம் மார்க்ஸிய முற்போக்குவாதம் முனைப்புப் பெற்றிருந்த காலமாகும். இலக்கியம் கீழ்த்தட்டு மக்களின், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை, அவர்களது ஏக்கப் பெருமூச்சுகளை, எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கவேண்டும். சாதிக்கொடுமை, சமுதாய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத் தனம், இன ஒடுக்குமுறை ஆகிய அனைத்துத் தீமைகளையும் எரித்து எரிசரமாக இலக்கியம் படைக்கவேண்டும். அது எமது நாட்டுக்கேயுரிய தேசிய இலக்கியமாகவும் மண்வாசனையைப் பிரதிபலிப்பதாகவும் இருத்தல் வேண்டும்என்பது மார்க்ஸிய முற்போக்குவாதிகளின் கருத்தாக இருந்தது.

                உண்மையில், இவ்வாறான ஒரு சட்டகத்துக்குள் நின்று இலக்கியம் படைக்கவேண்டும் என்ற விதியுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இவ்வாறு எழுதுவதால் கலாபூர்வமான வெளிப்பாடு குன்றி படைப்புகள் பிரச்சாரமாக மலினப்படுத்தப்பட்டுவிடும். மென்மையான மனித உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு விடும். காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ற சிந்தனைகள் மறுக்கப்பட்டுவிடும். தமிழ்த்துவம் சார்ந்த எழுத்துக்களுக்கு இடமில்லாமல் போய்விடும். இந்தச் சட்டகத்துக்கு அப்பாலும் மனிதகுல மேன்மைக்கான தேடல்கள் இருக்கின்றன என்பதே எனது கருத்தாகும். இக்கருத்துக்கமையவே எனது கதைகளும் அமைந்தன. இதன் காரணமாக ஈழத்து இலக்கிய உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அக்கால மார்க்ஸிய விமர்சகர்கள் எனது எழுத்துக்களைக் கண்டுகொள்ளவில்லை.

                மார்க்ஸியம் ஓர் உன்னதமான தத்துவம். அது ஒரு போதும் அழகியலைப் புறந்தள்ளவில்லை. மார்க்ஸியம் பற்றிய புரிதலை, கட்சி அரசியலுக்கும் தமது வசதி வாய்ப்புகளுக்கும் ஏற்றபடி அர்த்தம் கற்பித்தவர்களின் போக்குகளுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.

                ஆனாலும் இலக்கியம் பற்றிய எனது கருத்தியலுக்கமைய நம்பிக்கையுடன் எனது படைப்புகளை வெளிக்கொணர்ந்தேன்.

                எனது கதைகளிலும் சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிக்கொடுமை, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம், பெருமூச்சுக்கள் ஆகியன கருப்பொருள்களாக அமைந்துள்ளன. ஆனாலும் எரிசரமாக அவை படைக்கப்பட வில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

                எழுத்தாளன் எந்தக் கட்டத்திலும் தான் ஒரு பிரசாரகனாகத் தாழ்ந்துகொள்ளக்கூடாது. அதேசமயம் கதை சொல்பவனாகவும் இருக்கக்கூடாது. கதை நிகழ்ச்சிகளினுடாகச் செறிவுடனும் கூர்நோக்கு டனும் கதையை நகர்த்திச் சென்று வாசகனின் மனதில் ஒரு தனித்துவமான தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்என்பதே எனது சிறுகதைப் புனைவின் பண்பாக இருந்தது.

                மார்க்ஸிய விமர்சனம் முழுவதும் சமூகவியல் விமர்சனம் மாத்திரமே என்ற ஒரு கருத்துமயக்கம் பலரிடையே இருந்தது. மனித முழுமைக்குள்ளே கலையும் அடங்கும் என்ற எண்ணக்கரு புறந்தள்ளப்பட்டிருந்தது. சிலர் அந்த மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவேயில்லை  என்ற கருத்தினை பேராசிரியர் சிவத்தம்பி உயிர்ப்புகள்’ (1986)  என்ற சிறுகதைத்தொகுப்பின் விமர்சனக் குறிப்பில் கூறியிருந்தார். காலந்தாழ்த்திய கூற்று என்றே இதனைக் கருத வேண்டியுள்ளது.

                உண்மை என்னவென்றால் இலக்கியம் என்பது இலக்கியக்காரர்களின் அல்லது விமர்சகர்களின் மதிப்பீடுகளுக்காகக் காத்திருப்பதில்லை. அது மக்களின் பாவனைக்காகக் காத்திருப்பது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது, காலத்தினால் தரநிர்ணயம் பெறுவது.

                புதிய சுவடுகள்என்ற எனது நாவல் 1977ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அந்நாவல் சாதிப்பிரச்சனையைக் கருவாகக் கொண்டது. சமூக விமர்சன நோக்கில், நடைமுறைச் செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்த இந்நாவல் உயர்சாதியினரிடம் நிகழ்ந்து வரும் மனமாற்றங்களையும், இயல்பாகச் சமுதாயம் மாறிவரும் நிலையையும், சாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்துவருவதையும் எடுத்தியம்புகிறது. காலப்போக்கில் சாதியம் ஒழிந்துவிடும் என எதிர்வு கூறுகிறது. இந்நாவல் அவ்வாண்டின் சாகித்திய விருதினை எனக்குப் பெற்றுத் தந்தது. அது தந்த உற்சாகத்தில் நான் நாவல் துறையிலும் ஈடுபடலானேன்.

                எனது குருதிமலைஎன்ற நாவல் 1979ஆம் ஆண்டில் வெளியாகியது. இந்நாவல் மலையகத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது, பேருருக் கொண்டெழுந்த பௌத்த சிங்களப் பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்பு எவ்வாறு மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பாதித்தது, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பேரெழுச்சி, அவர்களின் போராட்டம், உயிர்த்தியாகம் ஆகியவற்றை அந்நாவல் பேசுகிறது.

                தப்பித் தவறிக்கூட குழுச்சார்பு விமர்சகர்களால் அந்நாவல்பற்றி ஒரு வார்த்தைதானும் பேசப்படவில்லை. ஆனால் மக்களால் பேசப்பட்டது, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை சாகித்தியப் பரிசு பெற்ற அந்நாவல் 1992 - 1993 காலப்பகுதியில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்புக்குப் பாடநூலாக விளங்கியது. சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கையிலும் தமிழகத்திலும் மூன்று பதிப்புக்களைக் கண்டது. குழுச்சார்பு விமர்சகர்களால் ஆகா, ஓகோஎனப் பேசப்பட்ட நாவல்கள் எதுவும் இத்தகைய தகுதியினைப் பெறவில்லை என்பதை எண்ணும்போது, இந்த விமர்சகர்களால் பேசப்படாததுதான் எனது எழுத்துக்களின் பெரும் தகுதிஎன நான் கருதுகிறேன்.

                ஒரு காலகட்டத்தில் ஈழத்து இலக்கியம் பல்வேறு தளங்களில் செழித்து வளரவிடாது, தமது குழுவைச் சாராத ஆக்க இலக்கியக்காரர்களை இவர்கள் மழுங்கடித்தார்கள் என்ற தார்மீகக் கோபம் எனக்கு எப்போதும் உண்டு.

                இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பற்றி நான் கூறுவது பொருத்தமில்லை. அவற்றைப்பற்றி பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் மிகவும் விரிவாகவே கூறியுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் உரியது.

                எனது எழுத்துக்கள் பல்கலைக்கழக மட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாடநூல்களாக வைக்கப்பட்டமை எனது எழுத்து முயற்சிகளுக்குக் கிடைத்த அப்பழுக்கற்ற அங்கீகாரமென நான் கருதுகிறேன்.

                பல சந்தர்ப்பங்களில் எனது எழுத்துக்களின் முதல் வாசகனாக இருந்து, காரசாரமாக விவாதித்து, எனது எழுத்துக்களை நெறிப்படுத்திய எனது இலக்கிய நண்பன் கலாபூஷணம் அமரர் புலோலியூர் க. சதாசிவம் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.

                எனது முதலாவது சிறுகதையை கலைச்செல்விசஞ்சிகையில் வெளியிட்டு என்னை எழுத்துலகுக்குக் கொண்டுவந்தவர் சிற்பி சி. சரவணபவன் அவர்கள். நான் எழுத்துலகில் அஞ்ஞாதவாசம் செய்த வேளைகளில் என்னை மீண்டும் மீண்டும் எழுதவேண்டும் எனத் தூண்டியவர்களில் முன்னாள் வீரகேசரி வாரமஞ்சரி ஆசிரியர்                     திரு. பொன் இராஜகோபால், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, பேராசிரியர் நா. சுப்பிரமணியன், சாரல்நாடன் முதலியோர் முக்கியமானவர்கள். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                என்றும் எனது எழுத்து முயற்சிகளின் ஆதார சுருதியாகி ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் எனது மனைவி ஞானத்துக்கும், எனது படைப்புகள் யாவும் தொகுக்கப்பட்டு அவற்றை நூல்களாக்கும் முயற்சியில் ஆர்வத்துடனும் முனைப்புடனும் செயற்பட்டுவரும் மகன் பாலச்சந்திரனுக்கும் எனது அன்பு என்றும் உரியது.

                எனது கதைகளை வெளியிட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஏனைய தொகுப்புக்கள் ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும், வாசித்து ஊக்கமளித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றி என்றும் உரியது.

                இந்நூலினைச் சிறப்பாகவும் அழகாகவும் அச்சிட்டு வெளிக்கொணரும் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினரே எனது நூல்கள் பலவற்றையும் அச்சிட்டு உதவுபவர்கள். அந்நிறுவனத்தின் அதிபர் திரு. பொன். விமலேந்திரன் அவர்களுக்கும் அச்சகப் பல்நிலைசார் ஊழியர்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றியை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

தி. ஞானசேகரன்

3 - B, 46வது ஒழுங்கை,

கொழும்பு - 06..

06-06-2005.